×

தொடர் முகூர்த்தம் எதிரொலி பர்னிச்சர் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

சேலம்: தொடர் முகூர்த்தம் காரணமாக பர்னிச்சர் பொருட்களான கட்டில், பீரோ, மெத்தை, சோபா உள்ளிட்டவைகளின் விற்பனை சற்று அதிகரித்துள்ளதாக பர்னிச்சர் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். திருமணமான பெண்கள் தன் கணவர் வீட்டுக்கு செல்லும் போது சீதனமாக இரும்பு அல்லது மரக்கட்டில், பீரோ, சோபா, மெத்தை, சில்வர், பித்தளை, செம்பு பாத்திரங்கள் உள்ளிட்ட சாமான்களை வழங்குவது வழக்கம். வசதிபடைத்தவர்கள் இதைதவிர கார், டூவீலர், பிரிட்ஜ், டி.வி. வாஷிங்மெஷின், கிரைண்டர், மிக்சி உள்பட பல்வேறு பொருட்களை வழங்குகின்றனர்.

இந்த வகையில் தமிழகத்தில் பீரோ, சோபா, இரும்பு கட்டில் செய்யும் பட்டறைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த பட்டறைகளில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பீரோ, கட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் சில்வர், பித்தளை, செம்பு பாத்திரம் உள்ளிட்ட சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கட்டில், பீரோ, சில்வர், பித்தளை, செம்பு பாத்திரங்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த பத்து மாதமாக பீரோ பட்டறைகள் சரிவர செயல்படாமல் இருந்தது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கில் பீரோ, கட்டில், மெத்தைகள் தேக்கமடைந்தது. இவ்வாறு தேக்கத்தில்  இருந்த பொருட்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்றது. இந்த நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பீரோ பட்டறைகளில் கட்டில், பீரோ, மெத்தை உள்பட பல்வேறு விதமான பர்னிச்சர் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த மார்கழியில் முகூர்த்தம் இல்லாததால் பர்னிச்சர் பொருட்களின் விற்பனை மந்தமாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு தை, மாசி மாதங்களில் அதிகளவில் முகூர்த்தங்கள் வருகிறது. இதன் காரணமாக புது மணப்பெண்களுக்கு சீதமான இரும்பு கட்டில், பீரோ, மெத்தை வழங்க பெண்வீட்டார் ஆர்டர் கொடுத்து வருவதால்,  பட்டறைகளில் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த பர்னிச்சர் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

ஓர் ஆண்டில் தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை உள்ளிட்ட மாதங்களில் முகூர்த்தங்கள் அதிகளவில் வரும். இந்த மாதங்களில் இரும்பு கட்டில், பீரோ, பஞ்சு மெத்தை உள்பட பல்வேறு பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். கடந்தாண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனாவால் கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்டவைகளின் விற்பனை குறைந்தது.
ஊரடங்கு தளர்வால் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக பட்டறைகளில் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளோம். இந்த நிலையில் தை, மாசி மாதங்களில் 12 முகூர்த்தங்கள் உள்ளன. இந்த முகூர்த்தங்களில் திருமணம் செய்ய ஏராளமானோர் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கட்டில், பீரோ, மெத்தை, சோபா விற்பனையும் சற்று அதிகரித்துள்ளது.

பாத்திரங்களின் விற்பனை ஜோர்

பாத்திரக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘முகூர்த்த நாட்களில் புதுமணப்பெண்ணுக்கு சீதனமாக சில்வர், பித்தளை, செம்பு பாத்திரங்கள் வழங்குவது வழக்கம். தை, மாசி மாதங்களில்  ஏராளமான முகூர்த்தங்கள் வருகிறது. இதன் காரணமாக பாத்திரக்கடைகளில் பெண்களுக்கு சீதனமாக வழங்கும் சில்வர்குடம், அண்டா, பித்தளை, செம்பு குடம், சில்வர் டம்ளர் உள்ளிட்டவைகளின் விற்பனையும் சற்று அதிகரித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அறுவடை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சற்று வருவாய் கூடியுள்ளது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து புதுபாத்திரம் எடுக்க விவசாயிகள் கடைக்கு வருகின்றனர். திருமண கோஷ்டியினர், விவசாயிகள் வருகை அதிகரிப்பால் பாத்திரங்கள் விற்பனை வழக்கத்தை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது,’’ என்றனர்.



Tags : Series Mukurtham, furniture products, sales increase
× RELATED நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு;...